Monday 21 July 2014

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு வேம்படி சுடலை ஆண்டவர்

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு
வேம்படி சுடலை ஆண்டவர்



சாத்தான்குளத்திலிருந்து நானும் எனது நண்பரும் ஏதேனும் செய்தி  சேகரிக்க கிளம்பி பேய்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தோம். தேனீர் அருந்தி சிறிது இளைப்பாரி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். வெயில்வேறு வாட்டி எடுத்தது. பேய்குளத்தில் இருந்து செல்லும் போது பழனியப்பபுரம் கடந்து சின்னமாடன் குடியிருப்பு செல்லும் மணல் சாலையில பயணித்த போது ஆள் நடமாட்டமே அங்கு காணவில்லை. 
அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் எங்கள் கண்களுக்கு பசுமையாக காணப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிக உயர்ந்து வளர்ந்த ஆலமரம், சுற்றிலும் பசுமையாக தெரிந்த செடி கொடிகள் இவைகளை கண்டதும் எங்கள் மனதில் இங்கு ஏதேனும் தெய்வசக்தி இருக்கிறது என்று தோன்றியது. 
ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியாக இருப்பதால் இதுபற்றி யாரிடம் விசாரிப்பது என்று யோசனை செய்துக்கொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு பெரியவர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது எங்கள் கண்களுக்கு தென்பட்டது.  அவரிடம் நாங்கள் எப்படி பேச்சை தொடங்குவது என்று எண்ணிக்கொண்டு அவரிடம் தண்ணீர் தாகமாக இருக்கிறது இங்கு எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டோம். உடனே அவர் தன் கையில் வைத்திருந்த குடுவையை எங்களிடம் நீட்டினார். அதில் தண்ணீர் இருந்தது. நாங்கள் இருவரும் தாகம் தீர்த்துக்கொண்டோம். அவர் கொடுத்த அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது. 
பின்பு அந்த பெரியவரிடம் இந்த இடத்தின் பசுமை பற்றி கேட்டோம். அதற்கு அவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தபகுதிக்கு பிழைப்பு தேடி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்கள் இந்த மர நிழலில் ஓய்வெடுக்க தங்கினார்கள்.
அவர்கள் வரும் போது தங்கள் குலதெய்வமான ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரை  ஒரு குடுவையில் வைத்து கொண்டு வந்தார்கள். அந்த குடுவையுடன் ஒரு குத்து விளக்கும், சில மணிகளும், வைர, வைடூரியங்களும் தங்க நகைகளும் கொண்டு வந்தார்கள். (கல்லில் செய்த பெரிய குத்து விளக்கு அது) இவைகளையும் அந்த மரத்தடியில் வைத்து சிறிது நேரம் இளைப்பாறினார்கள். பின் அங்கிருந்து நகரும் வேளையில் குடுவையையும், கல்லால் ஆன குத்து விளக்கையும் எடுக்க முயற்சிக்கையில் அவை அங்கேயே நிலை பெற்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த குடுவையும், கல்குத்துவிளக்கும், நவமணிகளும் அசையவில்லை-. மிகவும் மனம் வருந்தினார்கள்.
அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து ஒரு தெய்வக்குரல் கேட்டதாம் நீ இங்கிருந்து மூன்று கல் கிழக்கு நோக்கி செல் அங்கு உன் குடும்பத்தினர்களுடன் தங்கி இரு. நீ வசிக்கும் இடத்தில் எனக்கும் ஓர் கோயில் எழுப்பி என்னை வழிபடு. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எனக்கு இங்கு வந்து பொங்கல் வைத்து நீ வசிக்கும் இடத்திற்கு அழைத்து செல். நீயும் உன் சந்நதியும் நலமோடு வாழ்வீர்கள் என்று கேட்டது என பெரியவர் உருக்கமுடமன் சொன்னதை கேட்டதும் நமக்கு உடல் சிலிர்த்து விட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடு நாமும் அந்த மரத்திற்கு அடியில் சென்று பார்க்கலாமே என்று தோன்றியது. பெரியவரை அழைத்தோம். பெரியவர் சிரித்துக் கொண்டே நான் எப்போதும் இங்கேயே தானே அப்பா இருக்கிறேன் நீங்கள் சென்று பாருங்கள் நான் சொன்ன உண்மை தெரியும் என்று கூறினார். அவர் சுட்டி சாட்டிய ஊர்தான் சின்னமாடன் குடியிருப்பு என்பதை உறுதி செய்து கொண்டோம்.
நாங்கள் அருகில் சென்று மரத்தடியில் பார்த்தபோது, ஏதோ ஓர் மகிழ்ச்சியும், வாசனையும் வந்தது. அந்த மரத்தின் மீது சந்தனம், குங்குமம் இருந்தது. சில காய்ந்து போன மாலைகள் தொங்கி கொண்டு இருந்தன. பெரியவர் சொன்ன கல்குத்து விளக்கு மட்டும் அங்கே இன்றும் காணப்படுகிறது. அதை கண்டு மகிழ்ந்தோம். ஆனால் அவர் குறிப்பிட்ட குடுவை மட்டும் அங்கு இல்லை. அதுதான் பெரியவர் கையில் இருக்கும் குடுவை என்ற உணர்வு அப்போதுதான் எங்களுக்கு தென் பட்டது. கை கூப்பி சுடலை ஆண்டவரை வங்கி விட்டு பெரியவருக்கு நன்றி சொல்வோம் என்று பெரியவர் நின்ற திசையை நோக்கி பார்த்தால் பெரிய வரும் இல்லை. ஆடு, மாடுகளும் இல்லை. பக்தியுடனே...  சின்னமாடன் குடியிருப்பு நோக்கி பயணம் செய்தோம். 
சின்னமாடன் குடியிருப்பு சிறிய கிராமம் தான் ஆனாலும் அங்கு வீற்றிருந்து அருள் வழங்கும் ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரின் அருளோ மிகப்பெரியது.
இவரை சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஸ்ரீசுடலை ஆண்டர் கொடை விழாவை காண வருவார்களாம்.
முன்பு ஒருமுறை இவ்வாலயத்தில் அருள்வந்து ஆடிய பேயாண்டி நாடார் சுடுகாட்டுக்கு வேட்டைக்கு சென்றார். வேட்டை ஆடி வரும் போது ஒரு மனித எழும்பு கூட்டை தன் தோள் மீது சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்து விட்டாராம் இதை கண்ட ஊர்மக்கள் அலறி அடித்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சில தைரியமான பெரியவர்கள் அருள் வந்து ஆடும் பேயாண்டி நாடாரை பார்த்து இது என்ன கூத்து இப்படி நடந்து கொண்டால் எப்படி கொடை நடத்துவது? நீங்கள் வந்த கோலத்தை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று கேட்டனர். உடனே பேயாண்டி நாடார் ஆலயத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வெளி யில் வந்து வானை நோக்கி, இந்தாபிடி என்று உரக்க குரல் கொடுத்துவிட்டு  தன்தோள்மீது கிடந்த மனித எழும்பு கூட்டை வானத்தைநோக்கி வீசியுள்ளார். அது அப்படியே மறைந்து போனதாம். பின்பு ஊர் பெரியவர்கள் ஒன்று திரண்டு சுடலை ஆண்டியிடம் வேட்டைக்கு செல்ல கூடாது. அப்படி வேட்டைக்கு செல்லகூடாது. அப்படி வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால் ஊருக்கு வெளியே நீர் போய் அமர்ந்து கொள்ளும், நாங்கள் அங்கு வந்து கொடை கொடுத்து கொள்கிறோம் என்று வேண்டவே சுடலை  ஆண்டவர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொடுத்தாராம். அன்று முதல் இன்று வரை இங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் சுடலை ஆண்டவர் வேட்டைக்கு செல்வதில் லையாம். இந்த சுடலை ஆண்டவருக்கு தங்கத்தினால் ஆன வேலும், வாளும், ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் இருந்ததாம்.
இவரிடம் வேண்டிகொண்டால் வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும். சுடலை ஆண்டவர் ஆலயத்தில் பூக்குழி இறங்குவது சிறப்பாகும். இதை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அருள் வந்து ஆடுபவர்கள் பூக்குழியில் இறங்கி வந்து அருள்வாக்கு சொல்வார்கள் அப்போது சொல்லும் வாக்கு அப்படியே நடக்கிறது. 
பல ஊர்களில் சுடலைமாட சுவாமி கோயில் ஊருக்கு வெளியே கிழக்கு புறத்தில் தான் இருக்கும் ஆனால் சின்னமாடன் குடியிருப்பில் மட்டும் சுடலை ஆண்டவர் ஊருக்கு நடுவில்மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். வெளியூர்களில் வசிப் பவர்கள் கூட என்ன வேலை இருந் தாலும் சரி ஆடி கொடை விழாவிற்கு தவறாமல் வந்து சுடலை ஆண்டவரின் அருளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில்
ஆடி அமாவாசை திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வீற்றிருக்கும் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் இன்று ஆடி தை அமாவாசை திருவிழா மிகசிறப்பாக நடக்கிறது. சேர்மன் அருணாசல சுவாமி கோவிலுக்கு கிழக்கே திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், தெற்கே குலசை முத்தாரம்மன் திருக்கோவிலும், குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் திருக்கோவிலும், மேலுப்புதுக்குடி அய்யனார்திருக்கோவிலும், நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோவிலும், வரண்டியவேல் கிராமம் கசங்காத்த பெருமாள் திருக்கோவிலும் வடக்கே சிறுத்தொண்ட நல்லூர் முத்துமாலைஅம்மன் திருக்கோவிலும் அதன் அருகே உமரிக்காடு முத்தாரம்மன் திருக்கோவிலும், மேற்கு கடலில் பாதி என்று அழைக்கப்படும் கடம்பாகுளம் அருகில் புன்னை நகர் புதல்வர் உருவாக்கிய தமிழகச் சுற்றுலா துறைத்தலங்களில் ஒன்றாக விளங்கும் வனத்திருப்பதி சுவாமி திருக்கோவிலும் சிறப்பாக அமையப்பெற்றது.
திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி கிராமத் தில் ராமசாமி நாடார், சிவ ணைந்த அம்மை யார் அவர்களுக்கு சேர்மன்  அருணா சல சுவாமி தவத் திரு குமாரனாக  அவதரித்தார். அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி பயின்றார். அங்கு வாழ்ந்து வந்தார். கடவுள் அருள்பெற்ற தனது குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சலக நோய்களையும் குணப்படுத்தினார்.
பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப் பணியாற்றினார்.
இப்பணியை சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற பெயர் பெற்றார். சேர்மன் சுவாமி ஒருநாள் தன் சகோதரரை அருகில் அமர்த்தி பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில் (கலக வருடம் 1083&ம் (1908) ஆண்டு ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம் தேதி)  செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று கூறினார்.
ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின்  அருகில் என்னை சமாது செய்ய வேண்டும்.
சமாதுகுழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த நேரத்தில் மேலே கருடன் மூன்று நேரம் வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாது குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து மூடிவிடுங்கள் என்று கூறினார்.
சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது வயது 28 திருமணம் ஆகாமலேயே சமாதி ஆனார். அவர் சொன்ன வாக்கின்படியே நடந்தது. அன்று முதல் வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் திரு ஆலின் ஓரமாக புனித சமாது கொண்டு கருணை உருவமாக கற்பக கனியாக, ஜோதியாக கார்த்திடும் கற்பகத்தருவாக தன்னை  வேண்டும் அன்பர்க-ளுக்கு மண்ணும், தண்ணீரும் தன் திருமருந்தாக கொடுத்து சலக நோய்களையும் குணப்படுத்தி வருகிறார்.
அருணாசல சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஈரஉடையோடு வலம் வந்து கொண்டு வரும் புனித நீரை லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணால் செய்த லிங்கம் கரைந்து விடுமென்று கருதி கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும் என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால் மண்ணால் செய்து வைத்த லிங்கம் புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டு வருவதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இதனால் இன்று மண்லிங்கமே மூலஸ்தானமாக விளங்குகிறது. இது இயற்கையாக அமைந்த சிற்பமாகும். கோவில் நிர்வாஸ்தர் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிநாடார் அவர்கள் தை அமாவாசை திருநாளான இன்று சுவாமியை வணங்கி உலகின் தலைசிறந்த மக்களாக வாழுங்கள் என்று அழைக் கிறார்.  பக்தர்களாகிய நாமும் ஆடி அமாவாசை திருநாளில் சேர்மன் அருணாசல சுவாமியை வணங்கி உலகின் தலை சிறந்த மக்களாக வாழ்வோம்.