Sunday 16 December 2012

இசக்கி அம்மன்


இசக்கி அம்மன்







முப்பந்தல், நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியா குமரி மாவட்டத்தில் நுழைகிற இடத்திலிருக்கிற சின்னகிராமம். எப்போதும் பலமாகக் காற்றடித்த படி இருக்கிற கிராமத்தில் ஏகப்பட்ட காற்றாலைகள் சுழல்கின்றன. கிராமத்திற்குள் நுழைகிற இடத்தில், பின்னால் பசுமையான மலைப்-பின்னணி. கொத்தாகச் சில மரங்கள். அவற்றுக்கிடையில் பளீர் வெள்ளைச் சுவர், கிடுகிலான கூரையுடன் இருக்கிற இசக்கியம்மன் கோயில் பிரசித்தம்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரி, இதர காரணங் களுக்காக காற்றோட்டமான இந்த இடத்தில் சந்திப்பார்களாம். இதற்காகத் தனி மண்டபம், அதற்கெனத் தனிப்பந்தல் இருந் ததால் ‘முப்பந்தல்’ என்று பெயர் வந்த இந்தச் சிலுசிலுப்பான கிராமத்தில், இசக்கியம்மன் கோயில் வந்தது தனிக்கதை.
வரலாறு: பெரும்பாலும் குட்டையான உருவம். வாயில் கோரைப் பற்கள். கையில் ‘பச்சைக் குழந்தை, சில கோயில்களில் வலது இடுப்பில் குழந்தை, முகத்தில் விழி விரிந்து ஆங்காரத்துடன் காட்சியளிக்கும் இசக்கியம்மனுக்குப் பின்னால் ஏகப்பட்ட கதைகள்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு நிறை மாசம். மேடிட்டிருக்கிறது வயிறு. உள்ளே அசைகிறது பிஞ்சு உயிர். ‘அது எப்படி இருக் கும்?’ நிறையக் கனவுகள் கண்ணில். பிரசவம் நெருங்குவதற்கு முன் சட்டென்று ஏதோ மாற்றம். கனக்கிறது வயிறு. மூச்சு முட்டுகிறது, கதறுகிறாள். சுமந்த அடி வயிறுடன் அழுகிறாள். ‘உடம்பில் ஏதோ’ செய்கிறது. திணறுகிறாள் பல்லைக்-கடித்தபடி. ஏதோ சூழ்ந்து கொள்ள அலறலோடு அடங்குகிறாள். அவளோடு கூடவே சத்தம் எழுப்ப முடியாமலேயே வயிற்றி லேயே பிராணனை விடுகிறது அந்தக் குட்டி உயிர்.
கதறுகின்றன சொந்தபந்தங்கள். புதைகுழிக்குத் தூக்கிப் போகிறார்கள். இருள் வேளை. மேடான வயிறுடன் பேச்சிழந்து படுத்திருக்கிற பெண்ணின் வயிற்றைக் கிழிக் கிறார்கள். உள்ளே கருவிலேயே அடங்கிய குழந்தை. தொப் புள் கொடியறுத்து, தாயின் பக்கத்தில் மண்ணில் கிடத்து கிறார்கள். மிகவும் நெருங்கின சொந்தங்கள் கூடியிருக்க, மண்ணில் இறக்கி மூடுகிறார்கள், இரு உடல்களையும், வயிற்றில் சுமையோடு உயிரை விட்ட அந்த இளம்தாயின் நினைவாக சுமைதாங்கிக்கல்லை நடுகிறார்கள். அந்தச் சுமைதாங்கிக் கல்லையே பிறகு இசக்கியம்மனாகக் கும்பிடு கிறார்கள் என்பது குமரி மாவட்டத்தில் சொல்லப்படும் கதை. 
கோவில் தோன்றிய கதை: பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்குத் தொடர்ந்து வயிற்றுவலி. வைத்தியம் பார்த்தும் வலி குறையவில்லை. அவரது பேத்தி கனவில் வந்து உத்தரவிட்டிருக்கிறது இசக்கியம்மன். “முப்பந்தல் மரத்திற்குக்கீழ் இருக்கேன். எனக்கொரு இருப்பிடம் அமைச்சுக் கொடுங்க.”
நேரே முப்பந்தல் போய்ப் பார்த்திருக்கிறார்கள். ஒரு கல்லில் வெற்றிலை இடித்த கறை. அதையே சிலையாக்கி, சின்னதாக மண்டபம். பிறகு பிந்திய வருடங்களில் பிரபல மாகி விட்டது இந்தக்கோயில். எப்போதும் விதவிதமான ‘நேர்ச்சைகளுடன்’ வந்து குவிகிறது பெண்கள் கூட்டம். பக்கத்தில் மாடன் சாமி. அவருக்குத் தனி பூஜை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கோயில் நடை திறக்கிறது. வருவோர்க்கெல்லாம், குங்குமம் கொடுக்கிறார்கள். சிவப்பு காப்புக் கயிறு கட்டுகிறார்கள். வெண்பொங்கலும், பாயசமும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். பௌர்ணமி அன்று விசேஷக் கூட்டம். அன்று பூஜை செய்தால் பெண் களுக்குத் திருமணம் நடக்கும் என்று ஒரு நம்பிக்கை. பூஜை முடிந்ததும் அவர்களது கையில் மஞ்சள் கயிற்றைக் கட்டு கிறார்கள்.இரண்டாம் செவ்வாயன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு. வருஷத்துக்கொரு முறை பூக்குழி. அன்றைக்கு ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்கள். ஆடிமாதம் கொடைக்கு 41 நாட்களுக்கு முன்பே காப்பு கட்டுகிறார்கள். ஒரு வேளை மட்டும் பச்சரிசிச்சாதம் சாப்பிட்டு விரதம் இருக்கிறார்கள். பிறகு பூக்குழி இறங்குகிறார்கள். ஆண்கள் மட்டுமே இறங்குகிறார்கள்.
இன்னும் பழவூர் மாதிரி உள்ள இசக்கியம்மன் கோயில் களில் கொடையின்போது சாமியாடி உட்கார்ந்திருப்பார். அவருக்கு முன்பு நீண்ட வாழையிலை, அதில் சோறு; அவித்தமுட்டை; ஆடு, சேவல் கறி எல்லாம் இருக்கும்.
விளையும் பயிர்களில் முதல் விளைச்சலின் ஒரு பகுதியை இசக்கியம்மன் கோயிலுக்குக் கொடுப்பது இப்போதும் நடக்கிறது. கருப்பட்டி, எள்ளுருண்டையைக் கூட நேர்ந்து கொண்டு கொடுக்கிறார்கள். இதெல்லாமே கிராமப்புறத்து மக்களுக்கும் அம்மனுக்கும் இருக்கும் உள்ளார்ந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிற விஷயங்கள்.
கிராமங்களில் இருக்கும் கள்ளி மரம்தான் இசக்கியம்மனுக் குப் பிடித்தமான மரமாம். இன்னும் சில இடங்களில் கள்ளிமர நிழலில் இருக்கின்றன இசக்கியம்மன் கோயில்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் முன்னால் வெளிர் மஞ்சள் நிறத்தில் மரங்களில் தொங்குகின்றன சின்னச் சின்னத் தொட்டில்கள். இன்னொரு விதத்தில் சொன்னால், அவை கிராமத்துப் பெண்களின் குழந்தைகளுக்கான ஏக்கங்கள்; மங்கலான கனவுகள். கையில் குழந்தையுடன் வீர்யம் காட் டும் இசக்கியம்மன்,  இவர்களைப் பொறுத்தவரை இவர் களது குடும்பத்தின் பல தலைமுறைகளுக்கு முந்திய தாய்.



2 comments: