Wednesday 19 December 2012

தமிழக காவல் துறை நாட்டிலேயே


 முதன்மை இடத்தில் உள்ளது:


 ஜெயலலிதா பேச்சு



மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், "தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். நேற்று மாநாட்டின் 2-வது நாள் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர்கள் மட்டும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில், "கலெக்டர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். 3-வது நாளான இன்று போலீஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 

மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற முதல் நாள் கூட்டத்தின்போது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினோம். உள்நாட்டு பாதுகாப்பில் கலெக்டர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டிய ஒருங்கிணைப்புக்கான அவசியம் பற்றியும் விவாதம் நடத்தினோம். இன்று நாம் காவல் துறையில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி விவாதம் நடத்த உள்ளோம். 

இந்தியாவிலேயே தமிழக காவல் துறை பல்வேறு விஷயங்களில் முதலிடத்தில் இருப்பதை நாம் பெருமையோடு சொல்லி கொள்ளலாம். 1991-ம் ஆண்டு தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டம் என்னால் தொடங்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டுதான் 2001-ம் ஆண்டு மத்திய அரசு இதே போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தது. 1992-ம் ஆண்டு நான் முதல் முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கும் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக 1994-ம் ஆண்டு என்னால் கடலோர பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து இந்திய அரசு இதே போன்று திட்டம் தொடங்கி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. நான் 2-வது முறையாக முதல் - அமைச்சர் பொறுப்பை ஏற்றதும் காவல் துறையில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்தேன். 

2002-ம் ஆண்டு "அவசர விபத்து மீட்பு மையங்கள்'' தொடங்கப்பட்டன. நெடுஞ்சாலைகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் புதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு தொடங்கி வைத்தேன். 2003-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பாய்ஸ் கிளப் தொடங்கி வைத்தேன். அதன்பிறகு அந்த கிளப் பாய்ஸ் அன்டு கேல்ஸ் கிளப் என்று மாற்றப்பட்டது. 

நான் 3-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு மீண்டும் காவல் துறையில் நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். 2012-ம் ஆண்டு போலீஸ் கேண்டீன்கள் தொடங்கப்பட்டுள்ளன. போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதுபோல போலீசாருக்கு "உங்கள் சொந்த இல்லம்'' பெயரில் 36 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

காவல்துறையில் வாகனங்கள், ஆயுதங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. போலீசாருக்கான காப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை அலவன்சு, சீருடை அலவன்சு உள்பட அனைத்து வகை தினப்படிகளுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். கடந்த அக்டோபர் மாதம் சட்டசபையில் "தமிழ்நாடு காவல் துறையில் இளைஞர் படை'' உருவாக்கப்படும் என்று நான் அறிவித்தேன். இவை அனைத்துக்கும் மேலாக மாநிலத்திற்கு வெளியில் இருந்து தீய சக்திகள் ஊடுருவாமல் இருக்கும் சூழ்நிலையை நான் உறுதி செய்துள்ளேன். 

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் திறமையான  கட்டுப்பாடான காவல்துறையை நான் உருவாக்கி உள்ளேன். எனவே குற்றங்களை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், இங்கு வந்துள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 

முதல் நாள் கூட்டத்தின் போது பல போலீஸ் அதிகாரிகள் நல்ல கருத்துக்களை தெரிவித்தார்கள். உங்களது பயன் உள்ள பங்களிப்பு காவல்துறை மேலும் சிறப்பாக செயல்பட உதவும் என்று நான் உறுதி கூறுகிறேன். 

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். 

இன்று  மாலையுடன் மாவட்ட கலெக்டர்கள்- போலீஸ்  அதிகாரிகளின் மாநாடு நிறைவு பெறுகிறது. சிறப்பாக  பணியாற்றிய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு  முதல்- அமைச்சர் ஜெயலலிதா விருதுகள் வழங்குவார். அதன் பிறகு முதல்- அமைச்சர்  ஜெயலலிதா மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்

0 comments:

Post a Comment