Monday 17 December 2012

சிறுகதை






கொலையின் விலை


‘‘சுப்ரமணியம் தெரு, ஏழாம் நம்பர் வீடு, சைதாப்பேட்டை, பேரு சிதம்பரம்’’ -சொன்ன தாஸை ஏறிட்டுப் பார்த்தான் செல்வம்.

‘‘என்ன பாக்கறே... பார்ட்டியோட கதைய முடிச்சுட்டு வந்தின்னா... இந்த அம்பதாயிரம் உனக்கு...’’ என்றான் தாஸ்.

‘‘தாஸ்... நான் இப்பல்லாம்...’’

‘‘டேய், நீ ஆஷாவை காதலிச்சு, சொந்த பந்தங்களையெல்லாம் ரெண்டு பேரும் உதறிட்டு வந்தப்ப ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வெச்சு, இனிமே தொழிலுக்கு வர வேண்டாம்னு சொல்லி, உனக்கு ஆட்டோ வாங்கித் தந்தவனே நான்தான். என்கிட்டயே சொல்றியா...? இந்த ஒரு வருஷமா நான் உன்னையா கூப்ட்டேன். பசங்களை வெச்சே முடிச்சுட்டேன். இப்ப ஆளுங்க உள்ள இருக்காங்க, சிக்கலான நிலைமைன்னு தானே உன்னைக் கேக்கறேன். தவிர, நீதான் தடயம் இல்லாம முடிக்கிறதுல கில்லாடியாச்சே... போடா, போய் செஞ்சுட்டு வா...’’


செல்வத்தின் மனதில் காலையில் கிளம்பும் போது கண்ணீருடன் ஆஷா சொன்ன, ‘‘என்னங்க... பையனுக்கு ஆபரேஷனைத் தள்ளிப் போடாதீங்கன்னு டாக்டர் சொன்னது நினைவிருக்கில்ல..? இருபதாயிரம் ரூபாயை எப்படியாவது ஏற்பாடு பண்ணிடுங்க...’’ என்ற வார்த்தைகள் ரீவைண்ட் ஆகியது.

‘‘சரி தாஸ்! பணத்தோட இருங்க... வேலைய முடிச்சுட்டு வரேன்...’’ கிளம்பினான் செல்வம்.

‘‘ஆஷா... ஏய் ஆஷா...’’ உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி, கையில் ஐம்பதாயிரம் ரூபாய் அடங்கிய பேக் கனக்க, உள்ளே நுழைந்தான் செல்வம்.

‘‘என்னங்க...’’ என்றபடி வந்தவளி்ன் முகம் பிரகாசமாயிருந்தது.

‘‘பணத்தோட வந்திருக்கேன். கிளம்புடி, ராஜாவை ஹாஸ்பிடல்ல சேர்த்துடலாம்...’’


‘‘வேண்டாங்க... நான் ஏற்கனவே ஹாஸ்பிடல்ல சேர்த்து டெஸ்ட்டெல்லாம் எடுத்து முடிச்சுட்டு இப்பத்தான் வரேன். நாளைக்கு காலைல ஆபரேஷன்னு சொல்லிருக்காங்க...’’

‘‘என்னது...? ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டியா? எப்படிடி? பணம் கட்டச் சொல்வாங்களே..? என்ன பண்ணின?’’

‘‘காலையில நீங்க கிளம்பிப் போனதும் என் தாய்மாமா வந்தாரு. நாம கன்சல்ட் பண்ணின டாக்டர் பிரகாஷ் அவரோட ஃபிரண்டாம். அவர் மூலமா விஷயம் தெரிஞ்சுக்கிட்டு, மனசு கேக்காம வந்திருந்தார். அவரே மொத்தமா பணத்தைக் கட்டி ராஜாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கச் சொல்லிட்டார். இனி கவலையில்ல...’’

‘‘மை காட்! நான் இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. உன் மாமாவைப் பார்த்து தேங்க் பண்ணாட்டி எனக்கு நிம்மதியா இருக்காரு. அவர் அட்ரஸ் சொல்லு...’’

‘‘சுப்ரமணியம் தெரு, ஏழாம் நம்பர் வீடு, சைதாப்பேட்டை, பேரு சிதம்பரம்’’ என்றாள் அவள்.

minnalvarigal.blogspot.com

0 comments:

Post a Comment