Monday 17 December 2012

கை, கால்களை கட்டி புதுப்பெண் எரித்துக் கொலையா?

கை, கால்களை கட்டி 

புதுப்பெண் எரித்துக் கொலையா?


புளியந்தோப்பு கன்னிகா புரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை- குட்டியம்பாள் தம்பதி மகள் டெசி (வயது 24). இவருக்கும், புளியந் தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளிதரனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முரளிதரன் அதே பகுதியில் உள்ள கூரியர் பார்சல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். 


திருமணத்தின்போது டெசிக்கு அவரது பெற்றோர் 13 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து உள்ளனர். ஆனால் சீர்வரிசை போதாது என்றும், மேலும் பணம் வாங்கி வா என்றும் முரளிதரன், அவரது தாய் காவேரி, சகோதரி நதியா ஆகியோர் டெசியை தொல்லை செய்து தகராறு செய்து வந்தனர். 


டெசியும் தனது பெற்றோரிடம் அவ்வப்போது பணம் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் நேற்று டெசி உடல் முழுக்க தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று டெசி பரிதாபமாக இறந்தார். 


டெசியை அவளது கணவர் முரளிதரன், மாமியார் காவேரி, நாத்தனார் நதியா மற்றும் இவரது கணவர் சேர்ந்து கை, கால்களை கடடிப்போட்டு தீவைத்து கொன்று விட்டதாக டெசி உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். 


தலைமறைவான அவர்களை கைது செய்யக்கோரி இன்று காலை டெசியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் புளியந்தோப்பு அம்பேத்கார் கல்லூரி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் சிலம்புசெல்வன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். மறியல் செய்தவர்களுடன் சமரச பேச்சு நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். சாலை மறியலை கைவிட்ட அவர்கள் நேராக முரளிதரன் வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆவேசம் கொண்ட டெசி உறவினர்கள் முரளிதரன் வீட்டை அடித்து நொறுக்கினார்கள். கதவு, ஜன்னல்களை உடைத்து எறிந்தனர். 


தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசப் படுத்தினர். சமாதானம் அடையாத அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். டெசியின் கணவர், மாமியார் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


டெசி மரணம் குளறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment