Wednesday 19 December 2012

நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்:

 அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் 

இடம் பெறாது- மத்திய மந்திரி உறுதி



நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படும் என்று நாடார்கள் அமைப்புகளிடம் மத்திய மந்திரி பல்லம் ராஜு உறுதி அளித்தார். சி.பி.எஸ்.இ. 9-வது வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த பகுதியை நீக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற தி.மு.க உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்கக் கோரி அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழுவும் பெரும் போராட்டம் அறிவித்திருந்தது. 

சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்குவதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ கூறியதை தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த  பாடப்பகுதி நீக்கப்பட்டதாப என்பதை கண்டறியவும் மத்திய மந்திரி மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழு உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. தலைமையில் நேற்று மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்தனர். அவர்கள், நாடார் சமுதாயம் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலால் ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தின் உணர்வுகளும் புண்பட்டு இருப்பதாகவும், இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது மந்திரி பல்லம் ராஜு கூறியதாவது:- 

இந்த பிரச்சினை பற்றி நான் முழுமையாக அறிவேன். பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து ஆராய கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளேன். இந்த குழுவின் பரிந்துரையின்படி இந்த பாடத்திட்டத்தை நீக்க நடவடிக்கை  எடுப்பேன். அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் இந்த பகுதி கண்டிப்பாக இடம் பெறாது. இதுதொடர்பான போராட்டங்களை தங்கள் சமுதாயத்தின்  சார்பில் நடத்த வேண்டாம். 

இவ்வாறு மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்தார். 

மந்திரியை சந்தித்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை நாடார் தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் வி.டி.பத்ம நாபன், செயலாளர் ஜி.டி. முருகேசன், தமிழ்நாடு சத் திரிய நாடார் சமுதாய இயக்க கூடுதல் பொதுச்செயலாளர் எம்.மாரித்தங்கம், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment