Wednesday 19 December 2012


நான் உயிர் வாழ வேண்டும்: 



கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பிறகு அந்த மாணவி ஈவு, இரக்கமின்றி 6 வாலிபர்களாலும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். நள்ளிரவு பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட அவரை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆட்டோ கிடைக்காதால், அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி கொடூரத்தை சந்திக்க நேரிட்டது. நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி விட்டதால் அவருக்கு 24 மணி நேர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சப்தர்ஜங் மருத்துவ மனையில் அந்த மாணவிக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று அந்த மாணவியின் சிறுகுடல் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. கிருமி தொற்று ஏற்பட்டிருந்த சிறு குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. 150 முதல் 200 செ.மீ நீளத்துக்கு சிறுகுடல் இருந்தால் தான் உணவு ஜீரணமாகி ஒருவர் உயிர் வாழ முடியும். மாணவியின் சிறுகுடல் கணிசமாக அகற்றப்பட்டு விட்டதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. என்றாலும் மாணவியை காப்பாற்றி விட முடியும் என்று சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இன்று மாலைக்குள் மாணவிக்கு கொடுத்து வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி விட்டு அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையிடையே மயக்கம் தெளிந்து நினைவு வருகிறது. தனக்கு நேர்ந்துள்ள கொடூரத்தை நினைத்து கதறி அழும் அந்த மாணவியால் பேச முடியவில்லை. 

மெல்ல முனங்கியபடி உள்ளார். நேற்றிரவு சற்று தெம்பான அவர் பேனா, பேப்பர் வாங்கி எழுதி காட்டினார். அதில் அவர் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று எழுதினார். அதைப்பார்த்து மாணவியின் பெற்றோர், சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கண்ணீர் விட்டனர். உயிருக்குப் போராடி வரும் நிலையிலும் அந்த மாணவி தைரியமாக சிகிச்சைகளை எதிர்கொள்வதாக டாக்டர் தெரிவித்தார். 

இதற்கிடையே மாணவியை சிதைத்த 6 கயவர்களில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகளில் 2 பேர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்ட நிலையில் நேற்று ஒருவர் கைதாகியுள்ளார். மேலும் ஒருவரை  பிடிக்க பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment