Monday 17 December 2012

கர்நாடக அரசை கலைக்ககோரும் 
காங்கிரசின் கோரிக்கைக்கு ஆதரவு: எடியூரப்பா அறிவிப்பு
பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் தொடக்க விழாவில் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஒரு மந்திரி உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தனக்கு 60 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் எடியூரப்பா பகிரங்கமாக அறிவித்தார். இதனால் முதல் மந்திரி ஜகதீஷ் ஷெட்டர் தலைமையிலான கர்நாடக அரசு கவிழும் நிலையில் உள்ளது.

356வது சட்டப் பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பரிந்துரைக்க வேண்டும் என, கடந்த வாரம் கர்நாடக கவர்னர் பரத்வாஜிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர். இந்நிலையில் ஜகதீஷ் ஷெட்டர் அரசை கவிழ்க்க, காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க தயார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து ஹுப்ளியில் பேட்டியளித்த எடியூரப்பா கூறியதாவது:-

நான் பா.ஜ.க.வில் இருந்து விலகியதால் அந்த கட்சிக்கு தூய்மையான அந்தஸ்து கிடைத்திருப்பதாக ஜகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். இந்த தூய்மையான இமேஜை வைத்து ஈஸ்வரப்பாவும், ஜகதீஷ் ஷெட்டரும் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை கர்நாடகத்தில் உருவாக்கிக் காட்டட்டும். தற்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஆட்சி, எனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. நடத்தும் கூட்டணி ஆட்சி. எனவே பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமை கிடையாது.

பா.ஜ.க. தலைமைக்கு தைரியம் இருந்தால் என்னோடு மேடையில் தோன்றிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும். கர்நாடக சட்டசபையை கலைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு நான் ஆதரவு அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment