Monday 17 December 2012

கல்யாண் சிங் மீண்டும் பா. ஜனதாவில் சேருகிறார்


கல்யாண் சிங் மீண்டும்

பா. ஜனதாவில் சேருகிறார்


உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார். 1991-92 மற்றும் 1997-99 காலகட்டத்தில் பா.ஜ.க. சார்பில் உத்தரபிரதேச மாநில முதல் மந்திரியாக பதவி வகித்தவர் கல்யாண் சிங். பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக கட்சியை விட்டு விலகிய அவர், மீண்டும் 2004-ல் பா.ஜ.க.வில் இணைந்து புலண்ட்ஷர் தொகுதியில் போட்டியிட்டார்.


2009 சட்டசபை தேர்தலின்போது புலண்ட்ஷர் தொகுதி வேட்பாளராக அசோக் பிரதான என்பவரை பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது முறையாக கல்யாண்சிங் கட்சியைவிட்டு விலகினார். கிராந்தி என்ற புதிய கட்சியையும்  தொடங்கினார். இப்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைய கல்யாண் சிங் முடிவு செய்துள்ளார். இதற்காக தலைவர்களும் தூது விடுத்திருந்தார்.


உத்தர பிரதேச மாநிலத்தில் சரிவடைந்து வரும் பா.ஜனதாவின் செல்வாக்கை நிமிர்த்த, கல்யாண் சிங்கின் மறுவரவு கைகொடுக்கும் என முடிவெடுத்த பா.ஜ.க. மேலிடமும், கல்யாண் சிங்குக்கு பச்சைக்கொடி காட்டியது. எனவே அவர் 2009-ம் ஆண்டு தொடங்கிய கிராந்தி கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் இணைய கல்யாண் சிங் தீர்மானித்தார்.


இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க. எம்.பி., லால்ஜி டாண்டன் கல்யாண் சிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் மூத்த தலைவர்கள் கல்ராஜ் மிஸ்ரா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் அவருடன் பேசினார். இதை தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை நேற்று இரவு கல்யாண் சிங் சந்தித்து பேசினார்.


இந்த பேச்சு வார்த்தையின்போது அவருக்கு பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் பதவி வழங்குவதற்கான உறுதியை நிதின் கட்காரி அளித்ததாக கூறப்படுகின்றது. வரும் சங்ராந்தி (பொங்கல்) பண்டிகைக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் விழாவில் கல்யாண் சிங், தனது தொண்டர்களுடன் பா.ஜ.க.வில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment